எங்க மூத்த
பொண்ணு எலிசபெத் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறாள். அரசு பள்ளியிலே தான்
படிக்கிறாள். நல்லா படிப்பாள். டியூஷன்
ஏற்பாடு செய்வதற்கெல்லாம் வசதியில்லை. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு
படிக்கிறாள். தம்பி தங்கை தொந்தரவு இல்லாம
படிக்கனும்னு அதிகாலமே எழுந்து படிப்பா. “பக்கத்துத் தெரு பள்ளிவாசல்
தொழுகை சத்தம் காதைக் கிழிக்குதும்மா” னு நொந்துக்குவா.
“ கொஞ்சம் பொருத்துக்கம்மா, அவுங்க சாமியை அவுங்க
கும்பிடுராங்க! நாம என்ன செய்யமுடியும்?” என்று சமாதானம் சொல்லிப்
பார்த்தேன். “சாமி கும்பிடரவுங்க சத்தமில்லாமே கும்பிடலாமில்லெ”
என்று முனகினாள்.
பரிட்ஷை பக்கத்திலே வர வர தபசுகாலமும்
ஆரம்பிச்சுடுச்சு. எங்க தெருவிலேயே இருக்கிற நம்ப ஆலயத்திலே காலை
5:30 லிருந்து அரை மணி நேரம் தபசுகால அதிகாலை ஒலிபெருக்கி ஆராதனை நடக்குதுங்க.
படிக்க முடியலையேன்னு மகள் அழுகிறாள். “ஐயோ!
நம்ம கோயில் சமாச்சாரமாச்சே; யாரு கிட்டேயும் மறுப்பு
சொல்ல முடியாதே”னு மனசு அடிச்சுக்குது! நற்செய்தி சொல்ல வேண்டியதுதான் அதிகாலை அமைதியைக் குலைத்து வலுக்கட்டாயமா
‘சுவிசேஷக் கூச்சல்’ போடுவது எனக்கு சரியாப் படலை.
இஸ்லாமியர்
தொழுகை சத்தம் என் மகளுக்கு பிடிக்காத மாதிரி நம்முடைய லெந்து கால பக்தி பரவசம் எத்தனை
பேர் சாபத்தை சம்பாதிக்குதோ தெரியல்லையே.
அவரு கிட்டே மெதுவா சொல்லிப் பார்த்தேன். அவருக்கு
வந்துச்சே கோபம்: “நம்ப சேகரக்குழுவும், போதகர் ஐயாவும் சேர்ந்து செய்கிற காரியம் உனக்கு தப்பா தோணுதோ! முட்டாள், முட்டாள்!” என்று சீரினார்.
நீங்களே சொல்லுங்க, நான் ஒரு முட்டாளா?