Wednesday, December 17, 2014

நான் ஒரு முட்டாளுங்க! - 17 முகமூடி தாத்தா!

எனது இனிய நண்பர் ஒருவர் முகநூலில் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் போடுவதற்கு முன்னும் பின்னும் என்று இரண்டு ஃபொட்டொ போட்டிருந்தார்! முகமூடி போட்டவுடன் என் நண்பரை மட்டுமல்ல மனுஷனையே காணவில்லை. இப்படி விகாரமான கிறிஸ்மஸ் தாத்தா முகமூடி தேவையா

என்னைக் கேட்டால் பெரும்பாலும் நம்ப ஊர் கிறிஸ்மஸ் தாத்தா வடிவமைப்பு அபத்தம் என்றுதான் சொல்லுவேன். கடந்த பல பண்டிகையிலே பயன்படுத்தி ஒடுங்கிப்போன முகமூடியைப் போட்டு கசங்கின சிகப்பு அங்கியோடு ஒரு பையனை (அல்லது பெண்ணை) ரெடி பண்ணி கிறிஸ்மஸ் பவனிக்கும் கூட்டி வர்ராங்க. அந்த தாத்தாஒப்பில்லா திரு இரா…” பாட்டுக்குடுவிஸ்டும் பெத்தலையில் பிறந்தவரை…” பாட்டுக்கு குத்தும் அபத்தமா ஆடுவதோடு தனது கொடூரமான முகமூடிய காட்டி வீட்டிலே இருக்கும் குழந்தைகளை பயமுறுத்தி அழ வைச்சிட்டு போய்விடுவாரு. எனக்கென்னவோ பன்னீர் காவடி தூக்குகிற கூட்டத்திலே வருகிற கோமாளி மாதிரி நமது கிறிஸ்மஸ் தாத்தா கேவலமயிட்டாரொன்னு தோணுது!

நான் சின்ன பையானா கரூரிலே இருக்கும் போது எனக்கு பிரியமான கிறிஸ்மஸ் தாத்தா சாலமோன் தாத்தா தான். வளமான குரலும் அழகான மீசையும், கனமான உடல் கட்டும் கொண்ட அவர் 1950 களில் எங்க எல்லாருக்கும் எப்போதும் தாத்தா தான். கிறிஸ்மஸ் மரவிழாவிற்கு அவர் அழகான தலைப்பாகையுடன் வருவார். (தாடியைப் பற்றி யாரும் கவலைப் பட்டது இல்லை.)  எங்களுக்கெல்லாம் பெருத்த மகிழ்சிய்யும் சின்ன சின்ன பரிசுப் பொருட்களையும் தருவார். அடுத்து வரும் மாதங்களில் அவரைப் பார்த்தாலேதாத்தா! தாத்தா!!” என்று அவரை சுற்றி சுற்றி வரத்தோன்றும்.

நமது சபையிலிருக்கிற முதியோரை கனப்படுத்த நாம் எப்பொழுதும் விரும்புகிறோம். முட்டாள்தனம் என்று நினைக்காட்டி, ஒரு சின்ன ஆலோசனை - நமது கிறிஸ்மஸ் விழாக்களில் ஒரு முதியவரை கிறிஸ்மஸ் தாத்தாவாக கனப்படுத்தி சிறப்பு செய்தால் நல்லா இருக்கும்! அவரு விரும்பினார்னா கொஞ்சம் தாடி மீசை வையுங்க. ஆனா தயவுசெய்து முகமூடி போட்டு அழகான தாத்தா முகத்தை மூடிவிடாதீங்க.




No comments:

Post a Comment