Wednesday, September 16, 2026

 நான் ஒரு முட்டாளுங்க - 19 

சமாதான வாழ்த்து!

கிராமத்திலிருந்து நானும் என் சம்சாரமும் என் மகள் வீட்டுக்கு வந்திருக்கோம். மகள் குடும்பத்தோட ஆர்வமா கோவிலுக்கு வந்தோமுங்க. பெரிய அலங்காரமான ஆலயம்! அழகான பாடல்கள்! ஐயாருடைய அருமையான பிரசங்கம்! நான் அசந்து போயிட்டேன்.

ஆனால் பாருங்க, ஐயர் சமாதான வாழ்த்து கொடுத்ததுதான் எனக்கு ஏமாத்தமா இருந்துச்சுங்க. போதகர் ஐயா திருவிருந்து மேசைக்குப் பின்னால நின்னுகிட்டு, என்னமோ சமாதானப் புறாவைப் பறக்கவிடுவது போல இரண்டு கைகளையும் உயர்த்தி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக!” என்று உரக்கச் சொல்லிட்டு, “பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் வாழ்த்துச் சொல்லுங்க” என்று முனுமுனுத்தார்.

என் பக்கத்திலே இருந்த புண்ணியவான் அவருடைய அங்காளி பங்காளிக்கெல்லாம் சந்தோஷமா சமாதானம் சொன்னவரு, என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கலைங்க. பின்னாலே திரும்பிப் பார்த்தேன். சபையிலே பலர் மரப்பாச்சி பொம்மை மாதிரிதான் நின்றுகிட்டிருந்தாங்க. ஐயர் சொன்ன கர்த்தருடைய சமாதானம் கடைசிவரை வந்து சேர்ந்ததா தெரியலைங்க!

எங்க ஊரிலே எல்லாம் வேறே மாதிரிங்க. போதகர் சபை மூப்பரையும் ஓர் அம்மாவையும் முன்னாலே கூப்பிட்டு, அவுங்க இரண்டு கைகளையும் பிடிச்சு, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!” என்று சொல்லி அனுப்புவாருங்க. அவுங்க இரண்டு பேரும் கோயில் நெடுக கடைசிவரைக்கும் வந்து ஒவ்வொரு வரிசையிலும் முதலில் இருக்கிறவுங்க கையைப் பிடிச்சு சமாதான வாழ்த்து சொல்லிகிட்டேப் போவாங்க. சமாதானம் வாங்கினவுங்க அடுத்தவுங்களுக்கு கையைப் பிடிச்சு சொல்லுவாங்க. ஆண்டவர் கிட்டே இருந்து ஐயர் வாங்கிக் கொடுத்த சமாதானம், வரப்புக் கட்டிப் பாச்சின தண்ணீர் மாதிரி, ஆலயத்திலிருக்கிற அத்தனை பேருக்கும் வரிசை வரிசையா பாஞ்சு ஓடின மாதிரி சந்தோஷத்தைக் கொடுக்குமுங்க. திருவிருந்திலே பங்குபெற வாய்ப்பில்லாத சிருவர்/சிருமிகள் கூட இதிலே சந்தொஷமா கலந்துக்குவாங்க.

எங்க கிராமத்து ஐயர் செய்வது சரியா, அல்லது இந்தப் பெரிய கோயில் ஐயர் செய்வது சரியா என்று என் மனசுக்குள்ளே ஒரு நெருடல். என் மருமகன்கிட்டே கேட்டேனுங்க. அவரு உடனே “இறைவழிபாட்டு நூல்” ஜெபப் புத்தகத்தைப் படிச்சுப் பார்த்திட்டு, “மாமா, இந்தப் புத்தகத்தின் 3ஆம் பக்கத்தில் சமாதான வாழ்த்து ஏன் கொடுக்க வேண்டும், அதை எப்படிக் கொடுக்க வேண்டும், ஆராதனையில் எப்பக் கொடுக்க வேண்டும் என்று மிகத் தெளிவா எழுதியிருக்குதுங்க. அதன்படி பார்த்தால், உங்க ஊரிலே இருக்கிற நடைமுறைதானுங்க சரியானது. ஆனா பாருங்க, அதுக்கு அதிகம் நேரம் ஆகுமே” என்று சொன்னாரு.

“காணிக்கை வாங்குறதுக்கு மட்டும் குச்சியிலே பைய கட்டிக்கிட்டு கடைசிவரைக்கும் போறாங்களே! எல்லாப் பையும் வந்து சேருகிறவரைக்கும் பாட்டு வேறே! சமாதான வாழ்த்து சொல்ல அப்படி போகக்கூடாதா?” என்று கேட்க வாய் வந்துச்சு. அடக்கிக்கிட்டேன்.

நான் ஒரு முட்டாளுங்க!

சொந்த ஊர்க் கோவிலிலே கிடைக்கிற சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பட்டணத்து பெரிய கோவில்களிலே தேடலாமுங்களா? அதைப்பத்தி பேசினா படிச்சவுங்க நம்ம பேச்சைக் கேக்கவாபோறாங்க!


No comments:

Post a Comment